நல்ல ஹெட்ஃபோன் இருக்கிறதா? எடுத்துக்கொள்ளுங்கள். எதாவது பிஸி ஷெட்யூலில் இருக்கிறீர்களா? இல்லைதானே? இருந்தாலும் எல்லாவற்றையும் கொஞ்சம் ஒத்திவையுங்கள்.
இந்தப் பதிவை முழுவதும் படித்துமுடிக்க உங்களுக்கு வெறும் மூன்று நிமிடங்கள்தான் வேண்டும். ஆனால், ரசித்து கேட்டுக்கொண்டே படிக்க வேண்டுமென்றால் அரை மணிநேரம்கூட ஆகலாம். ரெடியா நீங்கள்?
ஓகே. வெல்கம் டு #Yuvanism!
Advertisement
1992. ரஜினி நடித்த ‘பாண்டியன்’ இசை வெளிவருகிறது. அதில் ‘பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா’ என்ற பாடல் ராஜாவின் மகன் கார்த்திக்ராஜா இசையமைத்தது என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று உலவிவந்தது. ‘முழு பாட்டெல்லாம் இல்ல.. கம்ப்யூட்டரைஸ்ட் போர்ஷன் சிலது மட்டும்’ என்று நம்புகிற மாதிரியேயான தகவல்கள் வேறு. ‘ஆஹா.. வந்தாச்சுடா இசை வாரிசு’ என்று கார்த்திக்ராஜாவைச் சுற்றி ராஜா ரசிகர்களின் கவன ஒளிவட்டம் விழுந்தது. அதன்பிறகு ஒரு சில படங்களில் பின்னணி இசை என்று வந்துகொண்டிருந்த கார்த்திக்ராஜாவின் பெயர் இசையமைப்பாளராக வந்தது, மாணிக்கம் படத்தில் என்று நினைவு.
சில வருடங்கள் கழித்து, 1996ல் அரவிந்தன் என்றொரு படம். சரத்குமார் நடிப்பில். இசை யுவன்சங்கர்ராஜா என்றது அறிவிப்பு. நன்றாக நினைவிருக்கிறது. ‘தங்கச்சூரியனே...’ என்ற பாடல் ஒரு பெர்ஃபெக்ட் ஹீரோ வொர்ஷிப் பாடலாக இருந்தது. எங்கெங்கே இசையை அடக்கி வாசிக்கவேண்டும் என்ற வித்தை தெரிந்தவராக யுவன் இருந்தார். அதுவும் முதல் படத்திலேயே. படம் வந்தபோது அவருக்கு வயது 16. படத்தின் மற்ற எல்லா பாடல்களைவிடவும் கவர்ந்திழுத்தது ஒரு பாடல். ‘ஈரநிலா விழிகளை மூடி..’ என்ற மெலடி. அந்த வயசில், இந்த மாதிரியான மெச்சூர்ட் மெலடியா என்று வியக்கவைத்தது. முதல் இடையிசையில் (interlude) புல்லாங்குழலால் வருடியவர், இரண்டாம் இடையிசையில் ராஜா ஸ்டைலிலேயே ஆன ஒரு இசையைக் கொடுத்திருந்தார். அதுவும் இடையிசை முடிந்து, சரணம் ஆரம்பிக்கிற இடைவெளியை கேட்கும் காதுகளுக்கு உணராமல் டிரான்ஸ்ஃபர் செய்ய வேண்டும். அதில் ராஜா சிங்கம் என்றால் நான் சிங்கக்குட்டிடா என்று யுவன் சரிவர செய்திருந்தார். கீழே க்ளிக்கிக் கேளுங்கள்..
அம்மா கிரியேஷன்ஸ் சிவாவிடம் பேசினோம்:
“இளையராஜாவை கமிட் பண்ணத்தான் போனேன். பார்த்தா கிரிக்கெட் விளையாடிட்டு அழுக்கு டிரஸ்ஸோட யுவன் வந்தாப்ல. ‘என்னப்பா.. என்ன பண்றதா உத்தேசம்?”ன்னு சும்மா பேச்சுக்குடுக்கத்தான் கேட்டேன். வடிவேலு வசனம் வருமே.. ‘ஒரு பேங்க் ஒண்ணு கட்டி விடுங்க.. நடத்தறோம்’னு.. அதே மாதிரி ‘ஒரு படம் குடுங்க. ம்யூசிக் பண்றேன்’னுச்சு தம்பி. நெசமாவான்னு கேட்டேன். ஆமான்னு சொல்லவும், ராஜா சார் வரவும் சரியா இருந்தது. ‘அய்யய்யோ அப்பாகிட்ட பேசிக்கங்க’ன்னு உள்ள ஓடிட்டார். ராஜாகிட்ட விஷயத்தைச் சொன்னதும் ‘அதான் பண்றேன்கறானே.. அவனையே வெச்சுப் பண்ணுங்க’ன்னார். நெசமா சொல்றாரானு டவுட்டோட பார்த்தேன். ’நெஜமாத்தான்யா சொல்றேன். எத்தனை வருஷமானாலும் யுவனை அறிமுகம் பண்ணது நீங்கங்கற பேர் உங்களுக்கு நிக்கும். அப்டி வருவான் பாருங்க’ன்னார். அது நெஜமாய்டுச்சு.
Advertisement
அடுத்தநாளே ரெகார்டிங். 16 வயசு. மைக் முன்னாடி நின்னா, யுவன் தெரியமாட்டார். மறைக்கும். குட்டிப்பையன். அப்டி இருந்து கம்போஸ் பண்ணினாப்ல. ஒரே நாள் ரெண்டு பாட்டு. அவங்கப்பா என்ன டெடிகேஷன்ல வொர்க் பண்ணுவாரோ.. அதே டெடிகேஷன்’என்கிறார் சிவா.
அதன்பிறகு 99-ல் வசந்த் இயக்கிய பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் கவனம் ஈர்த்தார். அப்போதே யுவனுக்கு என்றொரு இசைரசிகர் பட்டாளம் கொஞ்சம் கொஞ்சமாக உருவாகத் தொடங்கியிருந்தது. அதன்பின், ரிஷி படத்தின் ‘ஓ மனேமனே மானே மானே..’ யுவனிஸ ஆட்களில் சிலர்கூட கண்டுகொள்ளாத பாடல். அவ்வளவு அழகான ஒரு மெலடி. அதேபோலத்தான் அந்த வருடம் வந்த ‘உனக்காக எல்லாம் உனக்காக படத்தின் ‘வெண்ணிலா வெளியே வருவாயா’ பாடலும். ஆலாப்பில் ‘ஓ..’ என்று ஒரு வெட்டு இருக்கும். கேட்டுப்பாருங்கள்:-
2000. அஜித்-தின் தீனா. யுவன் பளாரென்று ஸ்மாஷ் அடித்தார் ஒரு பாடலில். அது... யெஸ்! சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்...! இதைப் படிக்கும்போதே புல்லரிக்கிறதுதானே..! மெலடியாய் ஆரம்பிக்கிற பல்லவியை, தொடர்ந்து ஹைபிட்ச்சில் எகிறவைத்து பித்துப்பிடிக்க வைத்தார். வாலியின் வரிகளில் ஹரிஹரன் பாடிய இந்தப் பாடலில் ‘வாலிபத்தின் சோலையிலே’யில் ஆரம்பிக்கும் வயலினிசை ‘ரகசியமாய்ப் பூப்பறித்தவள் நீதானே’வில் வழுக்கிக்கொண்டே விழும்போது நதியின் போக்கில் மிதந்துகொண்டே போய், ஓர் அருவியில் விழும் உணர்வு. என்னைப் பொறுத்தவரை யுவனிஸம் ஆரம்பித்த புள்ளி இந்தப்பாடல்தான் என்பேன்.
2001ல்தான் அந்த மேஜிகல் கூட்டணி உருவானது. செல்வராகவன் - யுவன். துள்ளுவதோ இளமை! இயக்கம் கஸ்தூரி ராஜா என்று இருந்தாலும், திரைக்கதை வசனமெழுதிய செல்வராகவன் படமாகத்தான் பின்னாளில் நினைவில் நின்றது. படம் 2002ல் வெளிவந்தாலும், பாடல்கள் 2001ல் வெளிவந்துவிட்டன. ‘கண்முன்னே எத்தனை நிலவு காலையிலே’ ஒரு Peppy Song என்றாலும் பாடலுக்கு முன் வரும் இசை மெலடியாக இருக்கும். படத்தின் மற்ற பாடல்களும் கவனம் ஈர்க்கத்தவறவில்லை. ‘இது காதலா முதல்காதலா பாடலில் டெம்போகூடும் இடமான ‘இதுதான் எந்தன் நெஞ்சுக்குள் பாயும் ரத்தம்..’ ஒரு வகை என்றால், கர்நாடிக் அடிப்படையிலான ‘தீண்டத்தீண்ட மலர்ந்ததென்ன’ வேறு வகையில் இருந்தது. தீண்டத்தீண்ட பாடலில், இடையிசையில் தொடர்ந்து ஒலிக்கும் வீணையும் சரி, சரணத்தில் பின்னணியில் ஒலிக்கும் கடமும், மிருதங்கம் சரி கலக்கல். அதன்பின் மனதைத் திருடி விட்டாய் படத்தின், மஞ்சக்காட்டு மைனா பாடல் அப்போது டிவியில் நேயர்கள் தொடர்ந்து கேட்கின்ற பாடலாக இருந்தது.
அதன்பிறகு வந்தது நந்தா! பாலாவின் படத்துக்கு யுவன்ஷங்கர்ராஜா இசை. முன்பனியா முதல்மழையா..! வாவ்! அந்தப் பாடலின் புல்லாங்குழல் தொடக்கம்தான் நாம் பெரும்பாலும் கேட்பது. அதற்கு முன் ஒரு 30 விநாடி பின்னணி இசை கொடுத்திருப்பார். ஒரு ஸ்பெஷல் பாடலுக்கான மூடுக்கு உங்களை செட் செய்துவிட்டு, அந்தப் பாடல் ஆரம்பிக்கும். யுவனின் பேர் சொல்லும் பாடல்களில் நிச்சயம் இதுவும் ஒன்று. ஆரம்ப ஃப்ளூட், அப்படியே மெஸ்மரிசம் செய்தது. இப்பவும் பாலாவுக்கு ராஜாவை விட யுவன் பெஸ்ட் என்பவர்கள் உண்டு.

2002. ‘ஏப்ரல் மாதத்தில்’ படம் வெளியானது. மனசே மனசே மனசில் பாரம் பேசப்பட்ட பாடல். இதே படத்தில் ‘பொய் சொல்ல இந்த மனசுக்குத் தெரியவில்லை.. சொன்னால் பொய் பொய்தானே’ என்ற பாடலில் யுவனின் குரல் முதன்முதலாய் கவனிக்கப்பட்டது. துள்ளுவதோ இளமை படத்தில் பாடியிருந்தாலும், இந்தப் பாடலில் அவரது குரலிலிருந்த தவிப்பு ஈர்த்தது. இந்தப் பாடலிற்குப் பிறகு இந்த மாதிரியான வகைப்பாடல் என்றாலே யுவன் குரல்தான் என்ற ட்ரெண்ட் ஆனது. பாலா படத்தில் ‘என் கண்ணைப் பிடுங்கிக்கொள் பெண்ணே’, ‘தீண்டித்தீண்டித் தீயை மூட்டுகிறாய்’, மௌனம் பேசியதேவில் ‘என் அன்பே என் அன்பே கண்ணுக்குள் கவிதாஞ்சலி’, ‘ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள’ என்று இவர் இசையமைத்த படங்கள் எதுவும் ஏமாற்றவில்லை.
2003-ல் வின்னர் படத்தில் உதித் நாராயணன் கடித்து துப்பிய ‘எந்தன் உயிர்த்தோழியே கண் திறந்து பார்த்தாய்..’ விஷுவல்ஸ் மிட்நைட் மசாலாவென்றாலும் கேட்கக் கேட்க வெகுவாய் ரசிக்கவைத்தது. அதே வருடம் வெளியானது காதல் கொண்டேன். ‘தேவதையைக் கண்டேன்’ பாடலுக்கு தமிழ்நாடே தாளம்போட்டது.தேவதை தேவதைதேவதை அவளொரு தேவதை தேவதை என்று பாடியது. அதே மயக்கத்திலேயே 2004ல் 7ஜி ரெயின்போ காலனியை எதிர்கொண்டான் இசை ரசிகன். ஏமாற்றவே இல்லை யுவன். ஷ்ரேயா கோஷலின் குரலிலும், கேகேவின் குரலும் தனித்தனியே வந்த நினைத்து நினைத்துப் பார்த்தேன் ஒன்றுக்கொன்று போட்டி போட்டது. கார்த்திக் குரலில் ‘கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை’ பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.
2004ல் சிம்புவுடன் கூட்டணி. மன்மதன் படத்தில் ‘காதல் வளர்த்தேன்.. காதல் வளர்த்தேன்..’ மென்சோகம் என்றால் ‘என் ஆச மைதிலியே’ அதிரி புதிரி பீட் எகிறும் ரீமிக்ஸ் ஹிட். 2005ல் அமீரின் ‘ராம்’ படத்தின் ‘ஆராரிராரோ நான் இங்கு பாட..’ மெலடியாக ஈர்த்ததென்றால் அதே வருடம் வந்த அறிந்தும் அறியாமலும் படத்தின் தீப்பிடிக்க தீப்பிடிக்க, தீப்பிடிக்காத குறையாக பற்றிக்கொண்டது. அந்தப் பாடல் வந்த நாட்களில், டிவியில் எந்தச் சேனலிலும் ஒலிக்கும் பாடலாக இருந்தது. கண்டநாள் முதல் படத்தின் பாடல்கள் மறுபடி வேறு வகையான பாடல்களாக அமைந்தது. தாமரையின் வரிகளில் ‘மேற்கே மேற்கே மேற்கேதான்’ என ஷங்கர் மகாதேவன் - சாதனா சர்கம் பாட, ஷ்ரேயா கோஷ, கேகே குரல்களில் ‘பனித்துளி பனித்துளி எனை சுடுவது சுடுவது ஏனோ’வும் கவர்ந்தது. சண்டக்கோழி படம் வந்தபோது தாவணிபோட்ட தீபாவளி என்று துள்ளிக்கொண்டே இருந்தது சேனல்கள்.

2005ல் கடைசியில் வெளியானது புதுப்பேட்டை பாடல்கள். படம் அடுத்த வருடம் மே மாதம்தான் ரிலீஸானது. பாடல் வந்தபோது அவ்வளவாக ஒன்றும் கவரவில்லை. வரியா வரியா பாடலின் குத்து, பிடித்திருந்தது. ஒரு பாட்டு கமல் பாடிருக்காராம் என்ற பேச்சு இருந்தது. படத்தின் தீம் ம்யூசிக்கை அப்போது கண்டுகொள்ளாதவர்கள், படம் ரிலீஸானதும் ‘வேற லெவல்டா டேய்’ என்று கொண்டாடித்தீர்த்தனர். யுவனின் பின்னணி இசையில் செஞ்சுரி போட்ட படம் புதுப்பேட்டை. தான் இசையமைத்த எல்லா படங்களிலும் ஒரு முத்திரைப்பாட்டாவது கொடுக்கத் தவறியதில்லை யுவன். பட்டியல் (ஏதேதோ எண்ணங்கள் வந்து ), வல்லவன் (லூசுப்பொண்ணே / யம்மாடி ஆத்தாடி), தாமிரபரணி (கருப்பான கையாலே / தாலியே தேவையில்ல / வார்த்த ஒண்ணு வார்த்த ஒண்ணு) என்று ஒவ்வொரு படங்களிலும் சொல்லலாம்.
புதுப்பேட்டைக்கு நடந்ததுதான் பருத்திவீரன் படத்திற்கும் நடந்தது. 2006 நவம்பரிலேயே பாடல்கள் வெளியாகி, பெரிதாக ஒன்றும் பேசப்படவில்லை. 2007 ஃபிப்ரவரியில் படம் வெளியாக பாடல்கள் பற்றிக்கொண்டது. ஊரோரம் புளியமரம் ஒவ்வொரு தெருவிலும் கேட்டது. ‘அய்யயோ என் இடுப்பு வேட்டி...’ வெகுவாக ரசிக்கப்பட்டது. ‘அட.. மகன் ம்யூசிக்ல அப்பா பாடிருக்காரு’ என்ற ஆச்சர்யத்துடன் கேட்கபப்பட்ட ‘அறியாதவயசு’ மிகவும் கவர்ந்தது.
2007ல் வெளிவந்த தீபாவளியும் இசைக்காகவே ஈர்த்தபடம். காதல் வைத்து காதல் வைத்து விஜய் யேசுதாஸ் குரலில் ஹிட்டானாலும் மாஸ் ஹிட்டடித்தது, யுவன் பாடிய ‘போகாதே போகாதே’ பாடல்தான். முதல் இடையிசையை சாதாரணமாக, குறைந்த நொடிகளே கொடுத்திருப்பார். இரண்டாம் இடையிசையில் நின்று நிதானமாக சொல்லியடித்திருப்பார்! 2.41-வது நிமிடத்திலிருந்து 3.35 நிமிடம் வரை வரும் வயலினும் கிடாரும்.. என்ன சொல்ல..! நிச்சயம் இந்த வார்த்தைகளைப் படித்தபின், அந்தப் பாடலைக் கேட்காமல் உங்களால் இதைத் தொடரமுடியாது. கேளுங்கள்:-
செல்வராகவன், அமீரைத் தொடர்ந்து வெற்றிக்கூட்டணியாக வெங்கட்பிரபுவுடன் சேர்கிறார் யுவன். சென்னை 28. செம ஜாலியான ஆல்பம் அது. யாரோ யாருக்குள் இங்கு யாரோ, ஜல்சா பண்ணுங்கடா, மேல ஏறி வாரோம் என்று அந்த ஆல்பத்தில் கலக்கிய யுவன் அடுத்து வித்தியாசமாக மெலடிகள் கலக்கும் ஓர் ஆல்பம் தருகிறார். அதுதான் ‘யாரடி நீ மோகினி’. வெண்மேகம் பெண்ணாக, எங்கேயோ பார்த்த மயக்கம் என்ற இரண்டு பாடல்கள் செம ஹிட். சத்தம்போடாதே படத்தில் பேசுகிறேன் பேசுகிறேன், தொட்டால் பூ மலரும் படத்தில் அரபுநாடே அசந்து நிற்கும் அழகியா நீ, கண்ணாமூச்சி ஏனடா படத்தில் மேகம் மேகம் என் காலில் மிதக்கிறதே என்று தொடர்ந்து ஹிட்ஸ்.
‘என் வாழ்க்கைல வந்தது மூணே மூணு லெட்டர்..’ என்று தொடங்கும் அந்த வார்த்தைகளை மறக்க முடியுமா? ‘நேரத்துக்கு சாப்டு, வாரத்துக்கு 3 நாளாவது குளி, அந்த சாக்ஸ தொவச்சுப் போடு.. நகம் கடிக்காத.. கடவுளை வேண்டிக்கோ - ஆனந்தி’ என முடியும்போது மெதுவாக ராஜா குரலில் தொடங்கும் பறவையே எங்கு இருக்கிறாய் நம்மை என்னவோ செய்தது உண்மை.
அதே கற்றது தமிழ் படத்தில் யுவன் பாடிய இன்னொரு பாடல் கொண்டாடப்படவேண்டிய ஒரு பாடல். அந்தப் பாடலுக்கான இடத்தை அது அடையவில்லை என்ற ஏக்கம் யுவன் ரசிகர்களுக்கு உண்டு. அப்படி ஒரு Cult Song அது. அந்தப் பாடல்தான் ‘இன்னும் ஓர் இரவு... இன்னும் ஓர் நிலவு’ யுவனின் குரலில் இதுவும் மனசை என்னவோ செய்கிற பாடல்தான்.
ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் வேறு வேறு வகை என்பதுதானே யுவனிஸம்! கற்றது தமிழ் வந்த வருடமே வந்த பில்லாவில் அதைச் செய்திருப்பார். தீம் ம்யூசிக்கில் கெத்து காட்டியிருப்பார். சிவா மனசுல சக்தி (ஒரு கல் ஒரு கண்ணாடி), சர்வம் (சிறகுகள் வந்தது எங்கோ செல்ல..) என்று அமைந்தாலும் யுவன் குரலில் பாடல் என்பதே ஸ்பெஷலாகிப்போனது. ‘சில இரவுகள் இரவுகள்தான் தீரா தீராதே.. சில கனவுகள் கனவுகள்தான் போகா போகாதே.. சில சுவடுகள் சுவடுகள்தான் தேயா தேயாதே.. சில நினைவுகள் நினைவுகள்தான் மூழ்கா மூழ்காதே..’ என்கிற வரிகளில் தேயா தேயாதே என்ற மெட்டைச் சிந்தித்த மூளையை எத்தனை பாராட்டினாலும் தகும். அப்படி ஆரம்பித்து, படாரென்று கொட்டித்தீர்க்கும் மழைபோல, அடுத்த வரியில் ‘நீதானே நீதானே என் நரம்புக்குள் ஓடினாய்’ என்று தொடரும் பாடல்.
ஜெய் நடிப்பில் வெளியான வாமனன் படப்பாடல்களிலும் ‘ஏதோ செய்கிறாய்... / ஒரு தேவதை பார்க்கும் நேரமிது’ என ஸ்கோர் செய்தார் யுவன். பையா பாடல்கள் வந்தபோது அடடா மழைடா என்று கொண்டாட்டமும், என் காதல் சொல்ல நேரமில்லை என்று காதலுமாய் கலக்கினார். அதன்பின் கோவா (இதுவரை இல்லாத ), பாணா காத்தாடி (தாக்குதே கண் தாக்குதே) பாடல்கள். நான் மகான் அல்ல படத்தில் சொந்தக்குரலில் பாடிய இறகைப்போலே அலைகிறேனே இன்றைக்கும் கேட்டால் திரும்பத்திரும்ப கேட்கவைக்கிற ரகம். ட்ரேட்மார்க் யுவனிஸம்.
இன்றைக்கு #5YearsOfMankatha கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் நம்ம தல ரசிகர்கள். அதன் தீம் ம்யூசிக் ரொம்பவே ஸ்பெஷல். ஒரு படத்தின் பெயரை தீம் ம்யூசிக்கிலேயே கொண்டுவருவதும், அது ஹிட்டடிப்பதும் சவால்தான். ‘மங்காத்தாடா’ -வில் அதை கனகச்சிதமாய்ச் செய்திருப்பார் யுவன். 2013ல் தங்கமீன்களில் ஆனந்தயாழை மீட்டினார்.
இப்போது வெளியான தர்மதுரையில் மக்க கலங்குதப்பா-வும் யுவன் டைப் பாடல்தான். ஆனால் இன்னும் வெளிவராத யாக்கை படத்தின் டிபிகல் யுவன்! ‘நீ என் கண்கள் நாளும் கேட்கும் தேவதை..’ எனத்தொடங்கும் இந்தப் பாடலில் பழைய யுவனைப் பார்க்க / கேட்க முடிகிறது. பல்லவி முடியும் நேரத்தில் இடியென இறங்கும் இசை மீண்டும் இசையற்ற குரல் மீண்டும் இசை என ஒரு ரோலர் கோஸ்டர் அனுபவம் இந்தப்பாடல்.
தயாரிப்பாளர் சிவா நம்மிடம் சொன்னதை இங்கே குறிப்பிட வேண்டும்: “ஜீவாம்மா போனதுல இருந்து அதிலிருந்து மீள, அவர் ரொம்பவே சிரமப்பட்டார். இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா இயல்புக்கு வர்றார். பத்து பதினைஞ்சு படம் கைல இருக்கு. யுவன் வந்துட்டார்!”
வாங்க ப்ரோ! ஹேப்பி பர்த்டே ப்ரோ!! கலக்குங்க!
#HBDYuvan #HBDU1 #U1BDay #Yuvanism🎼🎹🎷🎺🎸🎻
0 comments:
Post a Comment