Saturday, 31 October 2015

ஆயிரத்தில் இருவர் (சிறுகதை)

ஆயிரத்தில் இருவர் (சிறுகதை)
_________
-ஓகே ஓகே.. ஜோக்ஸ் அபார்ட்.. கொஞ்சம் சீரியஸ் மூட்க்கு போயிடலாமா?
-ஷ்யூர் ப்பா. சிச்சுவேஷன் சொல்லு..
....
அத்தனை அமைதியான அறையில் லேசாக திறந்த ஜன்னலில் வந்த காற்று கொடுத்த சத்தம் இடைஞ்சலாகப் படவே அதை சாத்திவிட்டு வந்தமர்ந்தார் முத்து. மூக்கில் மாட்டியிருக்கும் கண்ணாடியை மூக்குக்கு ஏதுவாக ஏற்றிக்கொடுத்தவாறு இரு கை அசைவுகளில் பேசத்தொடங்குகிறார் செல்வா!
-சீ.. ஸ்டோரி உனக்கே தெரியும். நத்திங் அவே ஃப்ரம் இட். சிச்சுவேஷன் என்னனா.. தான் காதலிக்குற பொண்ணு. ஆனா அவ உயிர் நண்பனா பார்க்குறா. அவளுக்கு அவன் கொழந்ததான். அதுவுமில்லாம அவ வேற ஒருத்தன காதலிக்குறா. வினோத் க்கு இதெல்லாம் புரியுது. புரியாம இல்ல. ஆனா அவனுக்கு திவ்யா தேவதை. அவள அவன் காதலனோட சேர்த்து வைக்கிறேன்னு பொய் சொல்லி வெளிய கூட்டிட்டு வந்துட்டான். யாரும் இல்லாத இடம். ட்ராவல் அண்ட் லிவ் இன் எ டார்க் ப்ளேஸ். அவன் மனசு இப்ப பாடுது. அவ மேல இருக்குற சொல்ல முடியாத லவ், அதுனால அவனுக்கு வர்ற லஸ்ட், அதுனால வர்ற வலி.. எல்லாமே இந்த ஒரு பாட்டுல சொல்லணும்.
-சூப்பர் ப்பா.. ட்யூன் ப்ளேஸ்மெண்ட் கேட்டா பாட்ட நீயே போட்ருவ போல.
-ஏன் இவ்வளோ சொல்றேன்னா இது ஜஸ்ட் ஒரு மூட் சாங் கெடையாது. வலி இருக்கணும். அது ட்ராவல் ஆகணும் ஆடியன்ஸ் க்கு. ட்ரை பண்ணு ப்பா.
-யாயா. சம் மோர் மினிட்ஸ் வெய்ட்.
.....
மினிட்ஸ் என்பது ஹவர்களைத் தாண்டிச் செல்ல செல்வாவின் முகத்தில் களேபரங்கள். முத்துக்குமாரும் செல்வாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர்.
.....
சின்ன முள்ளும் பெரிய முள்ளும் மூன்றைத் தொட்டுக்கொண்டு இருந்தது. யுவன் தன் பியானாவில் கை வைத்து அந்தப் பாடலுக்கான ட்யூனை இசைக்க ஆரம்பித்தார்.
.....
டியூன் காட்டின் இலைகளில் நீர்த்தெளித்தாற்போல அதனுள் நடந்து செல்லும் வழி கொடுக்க, யுவன் தன் பீட் எப்படி இருக்குமென்பதை பீட் ரிதமை பீட் ட்ரம்மில் போட்டுக் காண்பித்தார். சாட்டை எடுத்து ஒரு விசுறு விசிறினாற்போல் அது சுர்ரென்றது. வலிக்கான பீட் இதுதான் என உணர்ந்துகொண்ட செல்வா பாட்டு முழுக்க இது ட்ராவல் ஆகுறாப்ல இருக்கட்டும் யுவன். சூப்பர். என்கிறார்.
.....
முத்துக்குமாரும் அசராமல் பாடலுக்கு வலி/வலு சேர்க்க பாடல் உருவாகிறது.
'மனசு ரெண்டும் பார்க்க..
கண்கள் ரெண்டும் தீண்ட..
உதடு ரெண்டும் உரச..
காதல் வெள்ளம் இங்கு பொங்குதே!
நரம்பில் ஒரு நதி பாயுதே இது என்ன வேட்கை.
காதல் வலி உடல் காயுதே இது என்ன வாழ்க்கை!"
....
"எப்புடி முத்து? இத விட இந்த 'உன் மார்பில் வழிகின்ற நீர் அள்ளி மருந்து போல குடிப்பேன். என் பித்தம் கொஞ்சம் தணிப்பேன்!' .. கொன்னுட்டீங்க. நான் நெனைக்குறத நான் மட்டும்தான் கொண்டு வரமுடியும் ங்கற ஃபீல்ல ரெண்டு பேரும் இப்புடி அசால்ட்டா கொண்டு வர்றீங்க? சூப்பர்ப் யா!", என செல்வா புளகாங்கிதம் அடைகிறார்.
-அட சும்மா இருங்க செல்வா. கிண்டல் பண்ணிட்டே இருப்பீங்களே.
-சரி யுவன். அப்ப நாங்க கெளம்பறோம். நீயும் வர்றல?
-இல்ல செல்வா. நீங்க போயிட்டு வாங்க. நான் கம்ப்ளீட்டா ஓரியண்ட் பண்ணி முடிச்சு காலைல ரெக்கார்டிங்கும் முடிச்சுட்டு உனக்கு சொல்றேன்.
-நீதான?
-இல்லப்பா. ஷங்கர் ஜி பாடட்டும். ட்யூன் மைண்ட்க்கு வரும்போதே அவர் மைண்ட்க்கு வந்துட்டார்.
-சரி அப்ப ஓகே. நாங்க கெளம்பறோம். நீ முடிச்சுட்டு சொல்லு. இதான் லாஸ்ட் சாங். நம்ம ஆடியோ ரிலீஸ் டேட் நாளைக்கு ஃபைனல் பண்ணிடலாம். ப்ரொட்யூசர் க்கிட்ட நான் பேசிடுறேன்.
....
செல்வாவும் முத்துக்குமாரும் நகர யுவன் திரும்ப வேலைகளில் இறங்குகிறார்.
.....
பாடல் வெளியாகி நல்ல பெயர். உருகி உருகிப் போட்ட 'மனசு ரெண்டும்' பாட்டை எந்த எஃப் எம்மும் போட மாட்டேங்குறான். 1/2மணி நேரத்துல கம்போஸிங் முடிச்ச 'தேவதையைக் கண்டேன்' எல்லாத்துலயும் போடுறான். செல்வாவும் யுவனும் சிரித்துக்கொண்டனர். அதற்கு செல்வா, "அதெல்லாம் யோசிக்காத யுவன். நமக்கு ஒரு விஷயம் எவ்வளோ முக்கியம்னு படுதோ அதுக்கான உழைப்ப நம்ம குடுக்குறோம். இப்ப கண்டுக்காட்டியும் 10 வருஷம் கழிச்சு அத ஒருத்தன் ரொம்ப பெரிய பொக்கிஷமா நெனைச்சுப் பேசுவான். அது உனக்கு கேக்குதோ கேக்கலையோ.. அங்க நீ சாதிச்சுருவ!" என்றார்.
யுவன் செல்வாவை இறுக்கி அணைத்துக் கொண்டார். அந்தப் பரஸ்பர நட்பை இருவரும் உணர்ந்து சிலிர்த்துக்கொண்டனர். பின்னணிக்கான பணிகள் ஜரூராகி படமும் வெளியானது.
.....
முதல் அழைப்பே இயக்குனர் சிகரத்திடமிருந்து...
-ஹலோ. செல்வராகவன் தம்பி. படம் பார்த்தேன் வாழ்த்துகள். ரொம்ப நல்லா இருந்துச்சு.
-உங்க ஆசீர்வாதம் ங்க.
-அதெல்லாம் ஒரு வெங்காயமும் இல்ல. என்கிட்ட நீ கொஞ்ச நாள் வேலை பார்த்தேன்னு எல்லாம் வெளிய போய் சொல்லாத. உன் ஸ்டைலே வேற மாதிரி இருக்கு. தனியா இருக்கு. நல்லா வருவப்பா நீ.
-நன்றி ங்க சார்.
-யுவன் என்ன உனக்கு ரொம்ப க்ளோஸ் ஆயிட்டானா ப்பா? உனக்கு இவ்வளோ நல்லா பண்ணியிருக்கான். ஒரு சில விஷயங்கள் அவ்வளோ அழகா மியூஸிக்ல யே சொல்லிடுறான். அவன் ராஜா பையன். பொழைச்சுக்குவான். நீ அவன விட்டுடாத. பெரிய ராசியா வருவீங்க.
-நன்றி ங்க
....
செல்வாவுக்கு ஆனந்தம். தன் அப்பா பாராட்டியதெல்லாம் தாண்டி பெரிய பாராட்டாய் அது அமைந்தது. பொதுவாய் விமர்சனங்களுக்கெல்லாம் செவி சாய்க்காத செவி செல்வாவினுடையது. சைக்கோ இயக்குனர், வல்கரா இருக்கு என்பதையெல்லாம் அவர் பொருட்படுத்துவதில்லை. எடுக்க நினைத்ததற்கு வடிவம் கொடுத்தாயிற்று. தன்னை நிரூபித்தாயிற்று. செல்வாவிற்கு அது ஒன்றே திருப்தியாய் இருந்தது.
.....
தனுஷ் க்கு பெரிய வெற்றியாக அமைந்தது காதல் கொண்டேன். காதல் கொண்டேன் பார்த்த பிறகு இத்தனை அபாரமான நடிகனா இவர் என தனுஷின் துள்ளுவதோ இளமை ரீரிலீஸ் செய்யப்பட்டு வெற்றி கண்டது. தமிழின் முதல்முதலாக பின்னணி இசைக்கென்று தனியே ஆடியோ சிடியும் காதல் கொண்டேன் படத்திற்காக வெளிவந்தது. செல்வா விறுவிறுவென அடுத்த கதையை எழுதி முடித்திருந்தார்.
...
இதற்கிடையில் யுவனும் பிஸி ஆகிவிட்டிருந்தார். செல்வா 7ஜி எடுக்க ஆரம்பித்திருந்தார்.
-இதுலயும் மனசு ரெண்டும் பார்க்க மாதிரி பாட்டு இருக்காப்பா?
-கண்டிப்பா இருக்கு. ஆனா இது படத்தோட தீம். இதுதான் படத்தோட வேர் மாதிரி. கண்டிப்பா நீ நல்லா போடுவனு எனக்கு நம்பிக்கை இருக்கு. இத தீம் க்கு எல்லாம் யூஸ் பண்ணி வைரல் ஆக்கிட்டா படம் சக்ஸஸ்.
-தீம் லாம் நீ கவலைப்படனுமா ப்பா?
-தப்புதான் ப்பா.. நீ பண்ணு. நான் எப்புடினு சொல்றேன்.
புன்முறுவலுடன் சிரித்துக்கொள்கிறார்.
.....
இரவு 4மணிக்கு செல்வாவுக்கு யுவன் கால் செய்கிறார். நீ கேட்ட பாட்டுக்கு ட்யூன் கெடச்சாச்சு. உடனே கெளம்பி ப்ரசாத் வாப்பா.
-நெஜமாவா. இப்பவா..
-இப்பவே வாப்பா..
ஸ்ரேயா கோஷலுக்கும் அழைப்பு பறக்க, விடிவதற்கும் ரெடியானது 'நினைத்து நினைத்து பார்த்தேன்' பாடல்.
.....
7ஜி யைத் தொடர்ந்து, புதுப்பேட்டை .. தமிழின் வேறு ஒரு தளமான சினிமாவையும் அதன் இசைமொழியையும் தமிழுக்கு செலுத்திக் கொண்டிருந்தனர் யுவனும் செல்வாவும்.
......
-யுவன். ஒரு மீட் இருக்கு. போலாம் வரியா? அடுத்த ப்ராஜக்ட் பத்தி ப்ரொடியூசர் கிட்ட டிஸ்கஷன். நீ கண்டிப்பா இருக்கணும். என் ட்ரீம் ப்ராஜக்ட்
-இல்லப்பா. நான் இங்க சிம்பு கூட..
-என்ன பார்ட்டியா?
-இல்ல ப்பா. இங்கயும் டிஸ்கஷன் தான். நான் தான் ட்ரிங்க்ஸ் பண்ண மாட்டேன்னு உனக்கு தெரியும்ல?
-ஹ்ம்ம். இது முக்கியம் யுவன். ஒரு ஃபேண்டஸி படம். சொல்லியிருக்கேன்ல உன்கிட்ட.
-அதுனால என்ன செல்வா? நீ போய் பர்மிஷன் லாம் முடிச்சுட்டு வா.
-இங்க பார் யுவன். அவர் கேரக்டரே சரியில்ல ங்கறாங்க. நீ என்னன அவர் கூடதான் க்ளோசா இருக்க.
-இப்ப அதுனால என்னப்பா வந்துச்சு. உன்ன கூடதான் சைக்கோ டைரக்டர்னு சொன்னாங்க. அதுனால நான் எதாவது உன்கிட்ட பேசாம இருக்கனா என்ன?
-என் தம்பியே சொன்னான் ப்பா.
-உன் தம்பி கிட்ட கேளுப்பா அப்புடி என்ன விஷயம் சிம்பு பத்தினு.
-அப்ப நீ வரமாட்ட?
-இங்கயும் டிஸ்கஷன் ப்பா. எனக்கு உன் ஒரு படம் மட்டும் படம் இல்ல. ஐ ஹேவ் டு கிவ் ஜஸ்டிஸ் டு ஆல் செல்வா. அண்டர்ஸ்டாண்ட்.
..
செல்வராகவன் ஃபோனைத் துண்டிக்கிறார். கடுப்புடன் படத்திற்கு வேறு ஒரு இசையமைப்பாளர் ஒப்பந்தம் நடக்கிறது.
......
தன் தம்பி முன்பே சொல்லி வைத்திருந்தாற் போல் யுவன் அவர் மற்ற நண்பர் சிம்புவுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக மனஸ்தாபப் பட்டு செல்வா கோபப்படுகிறார். செல்வராகவனின் ட்ரீம் ப்ராஜக்ட் யுவன் இல்லாமல் வெளிவருகிறது. எல்லோருக்கும் அத்தனை ஆச்சர்யம். பத்திரிக்கைகள் படையெடுத்தன. இருவர் வீட்டிற்கும். இருவரிடமும் சரியான பதில் இல்லை. அதுவரையிலான தனுஷ் படங்களுக்கு ஆதாரமாக இருந்த யுவனின் இசை இல்லாமல் தனுஷ் படங்கள் வெளிவர ஆரம்பித்தன. செல்வராகவனுக்கு வருத்தம்தான். ஆனால் அவருக்கு இசையை வளர்ப்பது அவர் கதைதான் என்ற உறுதி! தன் கதையும் தன் திறமையும் எவர் இசையிலும் தன் படத்தை திறம்படக் கொடுக்க முடியும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். 'ஆயிரத்தில் ஒருவன்', 'மயக்கம் என்ன', 'இரண்டாம் உலகம்' என யுவன் இசை இல்லாமலே செல்வராகவன் படங்கள் வெளிவந்து கொண்டிருந்தன.
...
அதேபோல் யுவன் செல்வா படங்களுக்கோ, தனுஷ் படங்களுக்கோ இசையமைக்காமலேயே நூறு படங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார். என்ன இருந்தாலும் செல்வா படங்கள் வெளியாகும் பொழுது எல்லாம் 'யுவன் இதுக்கு இசையமைச்சு இருந்தா நல்லா இருந்துருக்குமே" என மக்கள் அங்கலாய்ப்பதும்,
"யுவன் செல்வா படத்திற்கு இசையமைப்பது மாதிரி இப்பொழுதெல்லாம் இசையமைப்பதில்லையே" என்று பத்திரிக்கைகள் கூறுவதும் தொடர்ந்த வண்ணமே இருந்தன.
......
வருடங்கள் ஓடிவிட்டிருந்தது. தனுஷ், யுவன், செல்வா மூன்றுபேருக்கும் ஏறுமுகமாகவே இருந்தபொழுதிலும், தனுஷ் க்கு யுவன் போன்ற ஒரு வைப்ரேஷனான இசை இல்லாமல் இருந்தது ஏமாற்றமாகவே இருந்தது. அனிருத் என்ற இசையமைப்பாளரை அறிமுகம் செய்து யுவன் தனுஷ் என்ற ரெக்கார்டுகளை எல்லாம் அடித்து நொறுக்கி கொலவெறி என்று உலக ட்ரெண்ட் கட்டுகிறார். அனிருத் சிம்புவிற்கும் நண்பராக இருக்க அனிருத் தனுஷ் சிம்புவை ஒன்றாக சேர்த்துவைக்கிறார். இருவரும் தங்களின் இதுவரையிலான புரிதல் தவறாக சென்றிருப்பதை உணர ஆரம்பிக்கின்றனர். நல்ல நண்பர்களாகவும் ஆகின்றனர்.
.....
செல்வராகவன் இரண்டு மூன்று இசையமைப்பாளர்களிடம் வேலை செய்து தான் நினைத்தது வந்தும் திருப்தி இல்லாலேயே இருந்தது அவருக்கே தெரிந்தது. யுவன் அவராக கூப்பிட்டால் நன்றாக இருக்குமே என்று யோசித்துக்
கொண்டிருந்தார்.
......
செல்வராகவனுக்கு அலைபேசி அழைப்பு வருகிறது.
-ஹாய் செல்வா..
-ஹாய் யுவன்..
-சாரி. பழசெல்லாம் மறந்துடலாம். ஈகோலாம் எதுக்கு. நானே முதல்ல சாரி கேட்டுக்கிறேன்.
-ஹே. அதெல்லாம் எதுக்குப்பா. நானே உனக்கு கூப்புடலாம்னு இருந்தேன்.
-ஆனா கூப்புட்டுருக்க மாட்ட செல்வா..
-சரி விடு. ஆனா நெஜமா இந்த முறை கூப்பிட்டுருப்பேன்.
-என்ன சேர்ந்து படம் பண்ணலாமா?
-பண்ணலாம் யுவன். ஒரு காட்டுக்குள்ள ட்ரெக்கிங் போற ட்ரிப் இருக்கு.
-அசத்திடலாம். யார் ஹீரோ!
-தம்பிதான் ப்ரொடியூஸ் பண்றான். பேரு 'கான்'னு வைக்கலாம்னு இருக்கேன். ஹீரோ வேற யாரும் இல்ல. நம்ம சிம்புதான்!
- ??!!!!
.....
யுவனும் செல்வாவும் சிரித்துக் கொள்கின்றனர்.!
________
(டிஸ்கி: இது ஒரு கற்பனைத் தழுவல் கதை. அவ்வளவே)

0 comments:

Post a Comment

slider

...
 
Top